

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து திருச்சியில் செய்ததுபோல் இங்குள்ள 16 டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை சமூகக் கூடங்களுக்கும், திருமண மண்டபங்களுக்கும் மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
போலீஸார் தகவல்களின் படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூரில் கடை எண் 9016 என்ற டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடையில் ராமகிருஷ்ணன், செந்தில் குமார் ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தாமு என்பவர் பார் உரிமம் வைத்துள்ளார். இவர்கள் மூவர் மற்றும் கேசவப்பெருமாள் என்ற இன்னொரு நபர் ஆகியோர் சேர்ந்து கடையின் பூட்டை உடைத்து பாட்டில்களை எடுத்துத் திருட்டுத்தனமாக விற்க முடிவு செய்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கடையை உடைத்து மதுபாட்டில்களைத் திருடியுள்ளனர். ஆனால் போலீஸுக்குத் தகவல் அளிக்க அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்னொரு சம்பவத்தில் இதே மாவட்டத்தில் சிப்காட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையைப் போட்டு இரண்டு பேர் மதுபாட்டில்களைத் திருட முயற்சி செய்தனர். சத்தம் கேட்டு கிராமத்தினர் கடை அருகே கும்பலாகத் திரண்டனர். திருடர்கள் வெளியே வந்ததும் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இரண்டு சம்பவத்திலும் கடையிலிருந்து மதுபாட்டில்களைத் திருடி விற்றுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேசி மதுபாட்டில்களை சமுதாயக் கூடங்களுக்கும் திருமண மண்டபங்களுக்கும் மாற்றவிருக்கிறோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கூறும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், அனைத்துக் கடைகளுக்குமே சிசிடிவி கேமராக்கள் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.