

மதுரை அண்ணாநகரில் வீட்டில் வைத்திருந்த பழைய பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் மக்கள் பீதியடைந்தனர்.
மதுரை அண்ணாநகர் வைகை காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் (இண்டீரியர் டெக்கரேட்டராக) பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல் இன்று காலையில் வேலை நிமித்தமாக வெளியே சென்றார். காலை 9.30 மணியளவில் அவருடைய வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்துள்ளது. தீ பற்றி கரும்புகையும் கிளம்பியது. இதனால் அச்சமடைந்த மக்கள் வெடிகுண்டு தான் வெடித்துவிட்டதோ என பீதியடைந்தனர். இது குறித்து தீயணைப்புத் துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். பின்னர் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் சோதனை நடத்தினர்.
வீட்டின் உரிமையாளரும் வந்துவிடவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், பண்டிகைக்காக வாங்கிய பழைய பட்டாசுகளை அவர் அப்புறப்படுத்தாமலேயே வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்தப் பட்டாசுகள் எதிர்பாராத விதமாக வெடித்து அதிலிருந்தே தீ பரவியது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியன எரிந்து சேதமடைந்தன. விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.
பட்டாசு மீது தீ பரவியது எப்படி என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.