

திருப்பரங்குன்றம் அருகே தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. மேலும், ரவுடிகளுக்கு இடையேயான கோஷ்டிப்பூசலில் வழிப்போக்கர் பலிகடா ஆனது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை (மார்ச்.7) திருப்பரங்குன்றம் அருகே வைக்கம் பெரியார் நகரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
தலை கிடைக்காத நிலையில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் தஞ்சாவூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (35) என்பதும் வேலை தேடி மதுரை வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "தஞ்சாவூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் வேலை தேடி மதுரை வந்துள்ளார். மதுரையில் இலக்கில்லாமல் சுற்றித்திரிந்த அவர் வைக்கம் நகர் பகுதியில் பைப் குமார் என்பவரைச் சந்தித்துள்ளார். பைப் குமார், அந்த நபருக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பெருமானேந்தல் கண்மாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பைப் குமாரின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் மச்சா சிவா (எ) சிவகுமார் ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் பைப் குமார் தங்களைக் கொலை செய்யவே ஆளுடன் வருவதாக நினைத்து மேலும் சிலரை அங்கு வரவழைத்துள்ளனர். சில நிமிடங்களில் அங்கு மேலும் 4 பேர் வந்துள்ளனர்.
இதனைப் பார்த்ததும் பைப் குமார் அங்கிருந்து தப்பியுள்ளார். தஞ்சாவூர் வாலிபர் நடப்பது எதுவும் புரியாமல் அங்கேயே இருக்க எதிர்கோஷ்டியினரிடம் சிக்கிக் கொண்டார்.
எதிர் தரப்பினர் அந்த வாலிபரைக் கொலை செய்து தலையைத் தூக்கி அருகிலிருந்த முட்புதரில் வீசி விட்டுச் சென்றனர்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக முத்துப்பாண்டி மற்றும் மச்சா சிவா (எ) சிவகுமார் ஆகிய இருவர் மீதும் அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கெனவே கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன
பைப் குமார் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியதாக நினைத்து மச்ச சிவாவும், முத்துப்பாண்டியும் இந்தக் கொலையை செய்ததாகத் தெரிகிறது" எனக் கூறப்பட்டது.