செக்கானூரணி பெண் சிசுக் கொலை சம்பவம்: கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்ட பெற்றோர்: கொலை வழக்குப் பதிவு

செக்கானூரணி பெண் சிசுக் கொலை சம்பவம்: கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்ட பெற்றோர்: கொலை வழக்குப் பதிவு
Updated on
2 min read

செக்கானூரணி அருகே பெண் சிசுக்கொலை தொடர்பாக கைதான பெற்றோர், சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்கள் மீது 302 சடடப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பி.மீனாட்சிபட்டியைச் சேர்ந்தவர் வைரமுருகன் (32). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சவுமியா(23). இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமடைந்த சவுமியாவுக்கு, கடந்த 31-ம் தேதி செல்லம்பட்டி ஆரம்ப சுகா தார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், கடந்த 2-ம் தேதி பச்சிளங் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை வீட்டுக்கு அருகில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், வைரமுருகன் - சவுமியா தம்பதிக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதை கொன்று புதைத்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

செல்லம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை முன்னிலையில் நேற்று குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஈஸ்வரன், ரமணா உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

முதல் கட்ட ஆய்வில் குழந்தை இயற்கையாக உயிரிழக்கவில்லை, கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து, வைரமுருகன், சவுமியா, அவரது மாமனார் சிங்கத்தேவன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

15 ஆண்டுகளுக்குப் பின் தலைதூக்கியுள்ள சம்பவம்..

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிசுவுக்கு 'விஷ திரவம்' அளிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதன் அடிப்படையிலேயே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வைரமுருகன், சவுமியா கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் வைரமுருகன், சவுமியா, சிங்கதேவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில், "மதுரை சுற்றுவட்டாரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக பெண் சிசுக் கொலை பதிவானது. அதன்பின் தற்போதுதான் இது போன்றதொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்துள்ளதை பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர். கள்ளிப்பாலை சேகரித்துக் கொடுத்தது யார் என்ற விசாரணை தற்போது நடைபெறுகிறது" என்றனர்.

புத்துணர்வு பெறுமா தொட்டில் குழந்தைகள் திட்டம்?

பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் நோக்கத்துடன் 1992-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் இல்லம் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன.

அதேவேளையில் பெண் சிசு கொலைக்கு எதிராக பெருமளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை, தேனி, உசிலம்பட்டி அரசின் சிறப்பு கண்காணிப்புக்குள் வந்தன.

இயக்குநர் பாரதிராஜா கருத்தம்மா என்ற படத்தின் மூலம் பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காலம் மாறிவிட்டது என்று நினைத்திருக்கும் வேளையில் தான் மீண்டும் பெண் சிசுக் கொலை செய்தி வெளியாகியுள்ளது.

இதனால், தொட்டில் குழந்தைகள் திட்டம் மீண்டும் புத்துணர்வு பெறுமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in