செக்கானூரணியில் பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு: தாய், தந்தை உட்பட 3 பேர் கைது- மீண்டும் தலைதூக்குகிறதா ‘சிசு’ கொலை?

செக்கானூரணியில் பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு: தாய், தந்தை உட்பட 3 பேர் கைது- மீண்டும் தலைதூக்குகிறதா ‘சிசு’ கொலை?
Updated on
1 min read

மதுரை அருகே செக்கானூரணி பகுதியில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுந்ததால் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இது பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகிலுள்ள புல்லநேரி மீனாட்சிபட்டியைச் சேர்ந்தவர் வைரமுருகன் (32). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (23). இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து சவுமியா கர்ப்பிணியானார்.

ஜனவரி 31-ல் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சவுமியாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வீட்டுக்கு திரும்பிய நிலையில், மார்ச் 2-ம் தேதி அக்குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை வீட்டுக்கு அருகில் புதைத்தனர்.

இந்நிலையில் அக் குழந்தையின் இறப்பு தொடர்பாக நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் பேசினார். வைரமுருகனுக்கு 2-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் அக்குழந்தையை கொலை செய்து, புதைத்துவிட்டனர் என,அந்த நபர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் அனிதா உள்ளிட்ட போலீஸார் வைர முருகன், சவுமியா, அவரது மாமனார் சிங்கத்தேவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சந்தேகம் எழுந்ததால் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி செல்லம்பட்டி தாசில்தார் செந்தாமரை, போலீஸார் முன்னிலையில் இன்று மதியம் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் ஈஸ்வரன், ரமணா உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் குழந்தையை கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெற்றோர் வைரமுருகன், சவுமியா, சிங்கத்தேவன் ஆகியோர் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார் கூறுகையில், "வைரமுருகனுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்து இருப்பதால் அக்குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பியதும், குழந்தையைக் கொன்று புதைத்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வர வேண்டும். செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதியில் ‘பெண் சிசு’ கொலையைத் தடுக்க, அரசு 'தொட்டில் குழந்தை' திட்டம் கொண்டு வரப்பட்டது. 15 ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை தடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வைரமுருகன்- சவுமியா தம்பதியர் தங்களது பெண் குழந்தையை உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என, சந்தேகத்தில் தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in