

போலி ஆவணத்தைப் பயன்படுத்தி மதுரையிலுள்ள தனியார் விடுதியில் தங்கிய உஸ்பெகிஸ்தான் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரை நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ஹேம மாலா தலைமையில் ஆட் கடத்தல் தடுப்பு மற்றும் விபச்சாரத் தடுப்புக்குழு (ஏசிடி) உருவாக்கப்பட்டுள்ளது. இப்படையினர் நகரில் சட்டவிரோதமாக நடந்த மசாஜ் கிளப்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்நிலையில், மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள சுப்ரீம் ஓட்டலில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு வாரமாக தனியாக தங்கியிருப்பதாகத் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து ஆய்வாளர் ஹேமமாலா உள்ளிட்ட தனிப்படையினர் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நைமோவா ஜெரினா என்பது தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 2019 ஜனவரி 10-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து டெல்லியில் தங்கியிருந்துள்ளார்.
விசா காலம் முடிந்த பின்னரும், அவரது நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார். அவரது ஆவணங்களைக் கைப்பற்றி விசாரித்தபோது, அவர் போலியான ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் மதுரை மேலப்பெருமாள் வீதியிலுள்ள ஓட்டலில் அறை எடுத்துத் தங்கி இருந்தது தெரிந்தது. அவரிடம் இருந்த போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வாளர் ஹேம மாலா கொடுத்த புகாரின்பேரில், திடீர்நகர் போலீஸார் அந்த இளம்பெண்ணை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர்.