

ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்தவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (75). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள். இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (36) என்ற ஆண்டவர்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து வெளியே வந்த முத்துராஜ், கடந்த 12.2.2016 அன்று கோவிந்தசாமியின் மகள் பேச்சித்தாய் (48) மற்றும் பேச்சித்தாயின் மகள் கோமதி (21) ஆகியோருடன் தகராறு செய்துள்ளார்.
இது தொடர்பாக பேச்சித்தாய் அளித்த புகாரின்பேரில், முத்துராஜிடம் ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால், பேச்சித்தாய் குடும்பத்தினர் மீது முத்துராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16.2.2016 அன்று ஊருக்கு வடக்கில் உள்ள அய்யனார் தோப்புக்கு கூலி வேலைக்குச் சென்ற பேச்சித்தாய், மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த முத்துராஜ், பேச்சித்தாயை வழிமறித்து தகராறு செய்தார். மேலும், அரிவாளால் பேச்சித்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பேச்சித்தாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும், அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பேச்சித்தாயின் மற்றொரு மகள் மாரி (19), அங்கு ஓடி வந்தார். அப்போது, மாரியையும் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டார்.
அப்போது, அந்த வழியாக வந்த பேச்சித்தாயின் தம்பி முருகன், முத்துராஜைப் பிடிக்க முயன்றுள்ளார். முருகனை அரிவாளைக் காட்டி மிரட்டிய முத்துராஜ், முருகனின் தந்தை கோவிந்தசாமியையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் நெட்டூருக்குச் சென்றுள்ளார்.
பேச்சித்தாய், மாரி ஆகியோர் உயிரிழந்ததை அறிந்த முருகன், தனது தந்தையைக் காப்பாற்ற வீட்டுக்கு விரைந்து சென்றார். ஊருக்கு வடக்கு பகுதியில் உய்க்காட்டு சுடலைமாடசுவாமி கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டு இருந்த கோவிந்தசாமியையும் முத்துராஜ் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, முருகன் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில், அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சுமத்தப்பட்ட முத்துராஜிக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.