

வேப்பனஹள்ளியில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வேப்பனஹள்ளியில் உள்ள பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், அங்குள்ள மற்றொரு பள்ளியொன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் வேப்பனஹள்ளி பேருந்து நிலையத்தில் அந்த மாணவன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது மது போதையில் அங்கு வந்த மாணவனின் நண்பர்களான ஜோடுகொத்தூரைச் சேர்ந்த ராஜா (26), திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மஞ்சுநாத் (22) இருவரும் மது கலந்து வைத்துள்ள குளிர்பானத்தை மாணவியிடம் சாதாரண குளிர்பானம் எனக் கொடுத்து பருக வைத்துள்ளனர். பின்னர் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த மூன்று பேரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, பள்ளிச் சிறுவனைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள இளைஞர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.