

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் க்ரைம் டீம் காவலர்கள் ராஜ்குமார், சிரஞ்சீவி, கந்தவேல், ரோமன், ரஜேஷ் ஆகியோர் நேற்று (பிப்.21) இரவு வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர்கள் 3 பேர் போலீஸாரைக் கண்டதும் ஓடினர். சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நெல்லித்தோப்பு ஆகாஷ் (எ) பிரசாந்த் குமார் (21), முதலியார்பேட்டை மணிகண்டன் (20), உருளையன்பேட்டை ஜோயல் (21) ஆகியோர் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த வினோத் (எ) வினோத்குமார் என்பவர் கஞ்சா வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமாரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த லூர்துராஜ் (எ) லூர்து என்பவர் கஞ்சா வழங்கியதும், மேலும் தேனியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (21), விஜய் (21) ஆகியோரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார், லூர்துராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அருண்பாண்டியன் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் புதுச்சேரி போலீஸார் தேனிக்குச் சென்று கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 60 கிராம் கஞ்சா, 4 செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேரையும் இன்று (பிப்.22) புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாரை எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.