

மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்ட பூட்டிய வீடுகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் இலவச வாய்ப்பைப் பயனபடுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என போலீ்ஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை நகரில் பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறை தகவல் தெரிவிக்கும் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் இலவச திட்டத்தை 2018- ல் அறிமுகப்படுத்தியது.
இதற்காக அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 65 சிசிடிவி கேமராக்களை வாங்கிக் கொடுத்தார்.
இத்திட்டத்தின் வசதியைப் பெற வெளியூர் செல்லும் நபர்கள், தங்களது வீடுகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க விரும்பினால், அந்தந்த காவல் நிலையம் அல்லது மதுரை காவல் துறையால் அறிமுகப்படுத்திய எஸ்ஓசி செல்போன் செயலியில் இடம்பெற்றுள்ள பூட்டிய வீடு கண்காணித்தல் (லாக்டு கவுஸ்) என்ற ஐக்கானில் ஒரு வாரத்திற்கு முன்பே முகவரி உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யவேண்டும்.
இதன்பின், நகர காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் தேவையான கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பர்.
வீட்டு உரிமையாளரின் செல்போனிலும் சிசிடிவியின் இணைப்பை வழங்கி, வெளியூரில் இருந்தே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்கின்றனர்.
இதன்மூலம் வெளியூர் சென்றிருக்கும் நபர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் திரும்பினாலும் அவரது வீடு பாதுகாக்கப்படுகிறது.
மதுரை நகரில் குறிப்பாக தல்லாகுளம், கூடல்புதூர் பகுதியில் பூட்டிய வீடுகளில் அடிக்கடி நடக்கும் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனாலும், பிற பகுதிக்கும் இதை விரிவுப்படுத்தும் விதமாக இருக்கிறது. துவக்கத்தில் இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது போலீஸார் தயார் நிலையில் இருந்தும் பூட்டிய வீடுகளைக் கேமராக மூலம் கண்காணிக்கும் திட்டத்திற்கான தகவல் பதிவு குறைந்துள்ளது. இதற்கான விழிப்புணர்வை போலீஸார் தொடர்ந்து ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் முன்வரவில்லை என, போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மேலும், "அதிக பகுதிகளை உள்ளடக்கிய கூடல்புதூர், தல்லாகுளம், புதூர் போன்ற காவல் நிலையப் பகுதியில் திருட்டுக்களைத் தடுக்க, பிரத்யேகமாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. என்றாலும், பொதுமக்கள் மத்தியில் இதற்கான ஆர்வமில்லை. அந்தந்த காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாலும், தெரிவிக்காவிடினும் பூட்டிய வீடு, கடைகளைப் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பது வழக்கம். குறிப்பிட்டு, பாதுகாப்பு தேவை என, தெரிவித்தால் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கிறோம். இதற்கு முக்கியமாக காவல் நிலையத்தில் தகவல், எஸ்ஓஎஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அறிமுகப்படுத்தினாலும், இது வரை சுமார் 70 பேர் மட்டுமே இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது, எல்லா காவல் நிலைய எல்லையிலும் கண்காணிக்கத் தயார் நிலையில் இருந்தாலும் மக்கள் தான் தயக்கமின்றி தகவல் தெரிவிக்கவேண்டும். இது பற்றி நாங்களும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். பொதுமக்கள் ஆர்வம் காட்டவேண்டும்" என்றார்.