Published : 12 Feb 2020 05:19 PM
Last Updated : 12 Feb 2020 05:19 PM

நவீன ‘சதுரங்க வேட்டை’: தங்கம் தரும் அட்சயப் பாத்திரம் என அட்டைப் பெட்டியை ரூ.2.10 கோடிக்கு விற்ற பலே நபர்கள் கைது 

தெய்வீக அட்சயப் பாத்திரம் என சாதாரண அட்டைப் பெட்டியைக் காட்டி ரூ.2.10 கோடிக்கு விற்பனை செய்து, வேலூர் தொழிலதிபரை நூதன முறையில் ஏமாற்றிய 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மனித மனம் எதிலும் எளிதில் திருப்தி அடைவதில்லை. பைக் சொந்தமாக இருந்தால் கார் இருந்தால் நலம் என நினைக்கிறது. ஆசைகள் அடுத்தடுத்துத் தாவும் குணம் கொண்டவை. ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையைத் தூண்டு என 'சதுரங்க வேட்டை' படத்தில் ஒரு வசனம் வரும். அதேபோன்று ஒருவரின் ஆசையைத் தூண்டி ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

திருப்பத்தூர் தொழிலதிபரின் ஆசையைத் தூண்டிய ஒரு கும்பல், கோடிக்கணக்கில் அவரை ஏமாற்றிவிட்டு அட்சயப் பாத்திரம் என வர்ண காகிதம் ஒட்டப்பட்ட அட்டைப் பெட்டியைக் கொடுத்துச் சென்றுள்ளது.

சுவாரசியமான இந்த வழக்கில் தொழிலதிபரின் நிலையைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட போலீஸார், நூதன முறையில் ஏமாற்றிய நபர்களை ஆந்திர போலீஸார் உதவியுடன் பிடித்துள்ளனர்.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் நவீன். இவர் பெரும் தொழிலதிபர். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நவீனை 9 பேர் கொண்ட ஒரு கும்பல் சந்தித்தது. அதற்கு முன் அவரிடம் அட்சயப் பாத்திரம் என்கிற பாத்திரம் உள்ளதாகவும், அதை பூஜை அறையில் வைத்து பூஜித்து குறித்த காலம் கழித்துத் திறந்தால் தங்கப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் என்று அந்த கும்பல் கூறியது.

அது குறித்து அறிந்து ஆசைப்பட்ட நவீன், ''அட்சயப் பாத்திரம் கிடைக்குமா?'' என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ''கிடைக்கும். ஆனால், அதுபற்றி நீங்கள் உங்கள் மனைவியிடம் கூட கூறக்கூடாது. அப்படி வெளியில் சொன்னால் அதன் சக்தி போய்விடும்'' என பில்டப் கொடுத்துள்ளனர்.

பின்னர் வர்ண காகிதங்கள் ஒட்டப்பட்ட சிறப்பாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அட்சயப்பாத்திரம் எனக் கூறி, சித்தூர் ஏரியாவில் ஒருவர் வீட்டில் வைத்து அவரிடம் ரகசியமாகக் காட்டியுள்ளனர்.

அதிலிருந்து வரும் சிக்னலை வைத்து தங்கப் புதையல் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கிலோ கணக்கில் தங்கமாக எடுக்கலாம் எனக் கூறி மாதிரிக்கு திறந்து அதிலிருந்து வரும் சிக்னலைக் காட்டுவது போன்று அவரை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அட்சயப் பாத்திரம் சிக்னல் செய்யவும் அங்கே தோண்டி ஏற்கெனவே புதைத்து வைத்த தங்க நகைகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

அதைப் பார்த்து பிரம்மித்துப்போன நவீன், ''இந்த அட்சயப் பாத்திரம் தனக்கு வேண்டும்'' எனக் கேட்டுள்ளார். ''அவ்வளவு எளிதில் கொடுத்துவிட மாட்டோம். இதற்கென தனி பூஜை அறை அதை வைத்துக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? என்று பார்ப்போம்'' எனக் கூறி அட்சயப் பாத்திரத்தின் மார்க்கெட்டை ஏற்றியுள்ளனர்.

எப்படியாவது அதை வாங்கி பூஜை அறையில் வைத்து அவ்வப்போது தங்கமாக எடுத்து இந்தியாவிலேயே பெரிய பணக்காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை வற்புறுத்தியுள்ளார் தொழிலதிபர் நவீன். முதலில் பெரிய தொகை ஒன்றைக் கூறியுள்ளனர். அவ்வளவு என்னிடம் இல்லை என்றவுடன், கடைசியில் ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு பேசி சித்தூருக்கு அழைத்துச் சென்று அதே வீட்டில் வைத்து ரகசியமாக ரூ.2.10 கோடியைப் பெற்றுக்கொண்டு அட்சயப் பாத்திரத்தை (அட்டைப் பெட்டியை) கொடுத்துள்ளனர்.

வாங்கிய பின்னர், தனது வீட்டில் ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து பூஜை செய்து சில நாட்கள் பொறுத்து நகைகள் இருக்கும் புதையலைக் காட்டும் என்கிற எண்ணத்துடன் பயபக்தியுடன் திறந்து பார்த்துள்ளார் தொழிலதிபர் நவீன்.

உள்ளே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உள்ளே வெறும் மரத்துண்டுகள் சிலவும் பேட்டரி, லைட்டுகளும் கிடந்துள்ளன. தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அப்போதுதான் உணர்ந்துள்ளார் நவீன்.

சித்தூர் அருகே குடிபள்ளியில் உள்ள வீட்டில் வைத்து அட்சயப் பாத்திரத்தை வாங்கியதால் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் தாம் ஏமாற்றப்பட்டதாக நவீன் புகார் கொடுத்துள்ளார். உடனடியாக களம் இறங்கிய குடிபள்ளி போலீஸார் அவர் கூறிய அங்க அடையாளத்தை வைத்து 9 பேரையும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருப்பதி அருகே வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கார்கள், இரு சக்கர வாகனங்கள் வந்தன. அதில் இருந்தவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை மடக்கிப் பிடித்து விசாரிக்க அவர்கள்தான் திருப்பத்தூர் நவீனை ஏமாற்றி அட்சயப் பாத்திரத்தை விற்றவர்கள் எனத் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மகாதேவாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் குடிபள்ளி பகுதியில் மகாதேவா தங்கியிருந்த ஹோட்டல் பின்புறத்தில், பிளாஸ்டிக் கவரில் போட்டு பூமி அடியில் புதைத்து வைத்திருந்த 75 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உட்பட 8 பேரிடமும் இருந்து மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த மகாதேவா (42), சிக்பல்லாபூர் பகுதியைச் சேர்ந்த கங்காதர் (30), பங்காருபேட்டையைச் சேர்ந்த சிவகுமார் (19), பெங்களூருவைச் சேர்ந்த தனசேகர் (35), கிரு‌‌ஷ்ணகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரா (40), வேப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (28), சித்தூரைச் சேர்ந்த சீனப்பா (35), காஞ்சிபுரம் ராஜகுளம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (35) என்று தெரியவந்தது.

அனைவரையும் கைது செய்த போலீஸார், ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார், ரூ.2 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். கட்டுக்கட்டாக கைப்பற்றிய பணத்தை செய்தியாளர்கள் முன் பார்வைக்கு வைத்த போலீஸார் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x