

மதுரையில் சட்டவிரோதமாக இயங்கிய பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார் 4 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் கப்பலூர் மேம்பாலத்தின் அருகே 100 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய தகர ஷெட் அமைத்து அதில் பெட்ரோல் சேமித்துவைத்து விற்பனை செய்துவந்துள்ளார் திருமங்கலம் கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த பூச்சி என்பவரின் மகன் ஆசை (50). மேம்பாலத்தில் நடுவழியில் நின்றுவிடும் வாகன ஓட்டிகளுக்கு அவர் பெட்ரோல், டீசல் விற்றுவந்துள்ளார்.
இந்த குடோனில் வழக்கமாகவே ஆசையும் அவரது நண்பர்களும் கேரம்போர்டு ஆடுவது வழக்கம். அப்படித்தான் இன்று அதிகாலையும் ஆசை அவரது நண்பர்கள் கணேசன் (40), விஜயகுமார் (35) கார்த்திக் (34), ஆறுமுகம் (65) ஆகியோர் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஒருவர் பீடி பிடித்து அதைத் தூக்கி எரிய. அந்த பீடி பெட்ரோல் கேனில் பட்டு தீ பரவி ஷெட் முழுவதும் எரிந்துள்ளது. இதில், கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற நான்கு பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.