

மதுரையில் தொழிற்கல்வி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மேல வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், விளாங்குடியைச் சேர்ந்த மரகதம் ஆகியோர் நாதன் என்பவரின் தட்டச்சு மையத்தில் பயிற்சி பெற்றனர். விக்னேஷ் ஏற்கெனவே அரசின் தட்டச்சு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு பிப்.5-ம் தேதி மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் மரகதத்துக்கு பதிலாக விக்னேஷ் பங்கேற்றுள்ளார். இதற்கு இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் நாதனும் உடந்தையாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது..
இந்த ஆள்மாறாட்டம் குறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ், மரகதம், நாதன் ஆகியோர் மீது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வியின் கூடுதல் இயக்குநர் அருளரசு ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், விக்னேஷ், மரகதம், நாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், அவர்களைத் தேடி வருகின்றனர்.