மின் கம்பியைப் பிடித்து மதுரை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை: போலீஸ் கெடுபிடியே காரணம் எனக் கூறி சக தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் 

மின் கம்பியைப் பிடித்து மதுரை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை: போலீஸ் கெடுபிடியே காரணம் எனக் கூறி சக தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் 

Published on

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் (43) என்ற ஆட்டோ ஓட்டுநர் மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு போலீஸாரின் கெடுபிடியே காரணம் எனக் கூறி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலை வாங்க மறுத்துப் போராடி வருகின்றனர். நகரின் பல பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டனப் பேரணி மேற்கொண்டனர். ஒரு சில ஆட்டோக்கள் கருப்புக் கொடியைப் பறக்கவிட்டவாறு இயக்கப்படுகின்றன.

ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் ஆட்டோ ஓட்டுநராக இயங்கி வந்தார். இவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது போலீஸார் நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் வீடு திரும்பிய அரிச்சந்திரன் வீட்டின் அருகேயிருந்த மின்மாற்றியில் ஏறி மின் கம்பியைப் பிடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், அரிச்சந்திரன் மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு போலீஸாரின் கெடுபிடியே காரணம் எனக் கூறி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் தரப்பிலோ, "அரிச்சந்திரனிடம் போலீஸார் ஆவணங்களை சரிபார்த்தது உண்மையே ஆனால் அவரிடம் எந்த கெடுபிடியும் காட்டப்படவில்லை. மேலும், அவர் வீட்டுக்குச் சென்ற பின்னர் மது போதையில் வீட்டருகே இருந்த மின் மாற்றியில் ஏறி மின் கம்பியைத் தொட்டார் " என எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in