Published : 31 Jan 2020 10:04 PM
Last Updated : 31 Jan 2020 10:04 PM

செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டுக்கு சீல்: சிபிசிஐடி போலீஸ் தகவல்

அரசுப்போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் தற்போதைய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டை சீல் வைத்துள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் செய்திக்குறிப்பு வருமாறு:

“தேவசகாயம் சாமுவேல் என்பவர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த பாஸ்கர் மற்றும் 11 நபர்கள் மீது கொடுத்த புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு 406, 420, 419 உடன் இணைந்த 34 இ,த,ச பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதியன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இதில் 81 நபர்களிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் பணம் மோசடியாகப் பெற்றுக்கொண்டு. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தொழில்நுட்பவாளர் பதவிகளுக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக. பாஸ்கர் கேசவன் உள்ளிட்ட 12 நபர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிசிபி மற்றும் சிபிசிஐடி வழக்குகளுக்கான சிறப்பு பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரும் இவ்வழக்கின் சாட்சியுமான அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவில் ஏற்கனவே கோபி என்பவர் தாக்கல் செய்த குற்றவியல் மனு மீது விசாரணையை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 02, 2016ல் வழங்கிய தீர்ப்புரையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கீழ் மட்ட குற்றவாளியையும் தாண்டி புலன்விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், மோசடியால் பெறப்பட்ட இரண்டு கோடி ரூபாய் எங்கு சென்றது என்பதையும் புலன் விசாரணையில் கண்டறியுமாறு ஆணையிட்டது.

இந்த ஆணையை குறிப்பிட்டு இவ்வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொண்டு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டிருக்கிறார். இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் 27/11/2019 நாளிட்ட தனது உத்தரவில் நீதிமன்ற வழக்கு விசாரணையை நிறுத்தம் செய்தும். இவ்வழக்கில் மறுபுலனாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் உதவி ஆணையர் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு வழக்கின் மறுபுலனாய்வினை தொடங்கினார், அதன்பேரில் நீதிமன்றத்தில் சோதனை ஆணை பெற்று இவ்வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் சாட்சியங்கள் இருப்பதாக சந்தேகப்படும் 17 இடங்களில் சென்னையில் 9 இடங்களிலும் கருரில் 5 இடங்களிலும், திருவண்ணாமலையில் 2 இடங்களிலும். கும்பகோணத்தில் ஒரு இடத்திலும் இன்று (31/01/2020) ஒரே சமயத்தில் சோதனை நடத்தப்பட்டது.

மேற்படி சோதனையில், மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள். ஆபரணங்களின் ரசீதுகள் தங்க நகைகள் மற்றும் இருசக்கர நான்குசக்கர வாகனங்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபர குறிப்புகள் அடங்கிய விபரங்களின் பட்டியல் மற்றும் நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள். அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியலும் கைப்பற்றப்பட்டன.

இதைத்தவிர மடிக்கணினி, வன்வட்டு. வெளிப்புற வன்வட்டு. பென்டிரைவ். மெமரிகார்டு ஆகியவைகளுடன் அசல் சொத்து ஆவணங்கள். வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள். வங்கி இருப்புப்பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டன,

இந்த வழக்குத் தொடர்பாக சோதனை மேற்கொள்ள செந்தில்பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டு காணப்பட்டதால், அரசு சாட்சிகளின் முன்னிலையில் பூட்டியிருந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இங்கு பின்னர் சோதனை மேற்கொள்ளப்படும். “

இவ்வாறு சிபிசிஐடி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x