Published : 31 Jan 2020 13:20 pm

Updated : 31 Jan 2020 16:02 pm

 

Published : 31 Jan 2020 01:20 PM
Last Updated : 31 Jan 2020 04:02 PM

பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை: அலறியடித்து ஓடிய பள்ளி குழந்தைகள், பெற்றோர்

congress-worker-murdered-in-puduchery
கொலையான சாம்பசிவம்

புதுச்சேரி

புதுச்சேரி அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி அருகில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி, வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் சாம்பசிவம்(35). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்து கொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் ஆவார்.

இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்நிலையில், பிள்ளையார்குப்பம் வீட்டில் இருந்து வரும் பிப். 7-ம் தேதி நடைபெற இருக்கும் தங்கை திருமணத்துக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைக்க இன்று (ஜன.31) காலை சாம்பசிவம் காரில் தனது உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார்.

அவர் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையை ஏறி இறங்கியபோது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், காரின் மீது 3 வெடிகுண்டுகளை வீசியது. அதில் காரின் கண்ணாடி உடைந்தது. காரில் இருந்த சாம்பசிவம் காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார்.

அதற்குள் சாம்பசிவத்தை சுற்றி வளைத்த மர்ம கும்பல், கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றது. இதில் சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். அரசு தொடக்கப் பள்ளி அருகில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட பள்ளிக்கு வந்த குழந்தைகளும், அவர்களது பெற்றோரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீஸ் எஸ்.பி.க்கள் ஜிந்தாகோதண்டராமன், ரங்கநாதன், ஆய்வாளர் கவுதம் சிவகணேஷ், உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சாம்பசிவத்தின் உறவினர்கள், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து போலீஸார் சாம்பசிவத்தின் உடலை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர். ஆனால், அவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸை சூழ்ந்தபடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களை கட்டுப்படுத்திய போலீஸார் சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் வெடிகுண்டு துகள்கள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் அங்கும் இங்குமாக ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து, கிருாமம்பக்கம் போலீஸார் வழக்கு பதிந்து, கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாம்பவசிவத்தின் உறவினர்கள், பொதுமக்கள் கடலூர்-புதுச்சேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிருமாம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையான சாம்பசிவத்தின் மாமாவான முன்னாள் கவுன்சிலர் வீரப்பன், கடந்த 2017-ம் ஆண்டு வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார்.


புதுச்சேரி கொலைகாங்கிரஸ்Puduchery murderCongress

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author