

மதுரையில் மளிகைக் கடை உரிமையாளரை வெட்டிப் போட்டுவிட்டு, பெட்ரோல் குண்டு வீசி தப்பிய கும்பலை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை சின்னக்கண்மாய் சண்முகா நகரைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்துகிறார். நேற்றிரவு வழக்கம்போல், வியாபாரம் முடிந்து, கடையை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கணேசனிடம் தகராறு செய்துள்ளனர். சிறிது நேரத்தில் மூவர் கணேசனை கீழே தள்ளி அரிவாளால் கை, கால்களில் வெட்டினர். 2 பேர் கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பினர்.
ஒரு குண்டு வெடித்து தீ பிடித்தது. இருப்பினும், பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை. இச்சம்பவத்தில் கணேசனுக்கு விரல்கள் துண்டிக்கப்பட்டு, கை, காலில் வெட்டு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் கணேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் கேகே. நகரிலுள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெப்பக்குளம் போலீஸார் விசாரிக்கின்றனர். நள்ளிரவில் காவல் துணை ஆணையர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில், "பொங்கலையொட்டி, கணேசன் கடை இருக்கும் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் ஆடிப்பாடி அமர்க்களம் செய்துள்ளனர். கடைக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி கணேசன் தட்டிக்கேட்டுள்ளார்.
இருதரப்பிலும் தகராறு ஏற்பட்டு, மோதிக்கொண்டனர். இது தொடர்பாக கணேசன் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலரை அழைத்து விசாரித்தோம். அவர்களைக் கண்டித்து, எச்சரித்து அனுப்பினோம். வழக்கு வேண்டாம் என, இரு தரப்பிரனரும் சமரசமாகப் போவதாக எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர்.
இதற்கிடையில் கணேசனை தாக்கி, அவரது கடைக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி அவருடன் தகராறு செய்த இளைஞர்களே கணேசனை தாக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக விஜயன் உட்பட 5 பேரைத் தேடுகிறோம்" என்றனர்.