மதுரை ஆதீன மடத்தில் விநாயகர் சிலை திருட்டு: விளக்குத்தூண் போலீஸ் விசாரணை

மதுரை ஆதீன மடத்தில் விநாயகர் சிலை திருட்டு: விளக்குத்தூண் போலீஸ் விசாரணை

Published on

மதுரை ஆதீன மடத்தில் விநாயகர் சிலை திருடு போனதாக விளக்குதூண் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகைக்கடை பஜார் பகுதியில் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான மடம் செயல்படுகிறது. இதைச் சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில் ஆதீனத்தின் சட்ட ஆலோசகர் முத்துப்பிரகாசம் என்பவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், “மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கடை ஒன்று ஒட்டல் நடத்துவதற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இக்கடையை காலி செய்வதில் பிரச்சினை உள்ளது.

இதற்கிடையில் ஆதீன மடத்திற்குள் இருந்த விநாயகர் கற்சிலை ஒன்று திருடுபோயிருக்கிறது. மடத்திற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர் சிலையை திருடியிருக்கலாம்.

இந்த திருட்டு விவகாரத்தில் ஏற்கெனவே கடையை காலி செய்ய மறுக்கும் நபர் மீது சந்தேகம் உள்ளது. எனவே, இது தொடர்பாக விசாரித்து, சிலையை மீட்டு ஒப்படைக்க வேண்டும். திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை விளக்குத்தூண் போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in