

நாகாலாந்து அரசியல் தலைவர் ஒருவரைக் கொல்வதற்காக ரூ.80 லட்சம் மற்றும் போர்ட் எண்டவர் கார் என்று பேரம் பேசிய கூலிக்கொலையாளி ஒருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
2019 பொதுத்தேர்தலுக்குப் பிறகு பெயர் வெளியிடப்படாத அந்த நாகாலாந்து அரசியல்வாதியைக் கொலை செய்யவே இந்த பேரம் செய்யப்பட்டதாக தகவல் எழுந்தது எப்படியெனில் கடந்த ஆண்டு மே 17ம் தேதி ரவுடி விஜய் ஃபர்மனா என்பவரைக் கைது செய்ததையடுத்தே இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
உ.பி. தலைநகர் லக்னோவில் கூலிக்கொலையாளி விஜய் ஃபர்மனா தன் காதலியைச் சந்திக்க வந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை பொறுப்புடன் அணுகி வழக்கு விசாரணையை ஜூலை 31ம் தேதியன்று சிபிஐயிடம் ஒப்படைத்தது.
ஏப்ரல் 2019-ல் கூலிப்படை தலைவன் ஃபர்மனா தன் கூட்டாளிகளான ஷரத் பாண்டே, கபில் சிதானியா ஆகியோருடன் நாகாலாந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் யார் அந்த அரசியல் தலைவர் என்ற பெயரை சிபிஐ வெளியிட மறுத்து விட்டது.
விரைவில் ஃபர்மானாவை சிபிஐ தன் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு மேலும் பல அரசியல் சதி உள்ளதா என்ற நோக்கிலும் இந்த விஷயத்தில் பணம் கொடுத்து கொலை செய்யச் சொன்னவர் யார் என்று விசாரித்துத் துருவ உள்ளது.
விஜய் ஃபர்மனா மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019 மே மாதம் இவரைப் பிடித்துக் கொடுத்தால் ரூ.50,000 பரிசு என்று டெல்லி போலீஸ், ஹரியாணா போலீஸ் இரண்டுமே அறிவித்தது