

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் சகோதரியின் கணவரைக் கொலை செய்த கூலித் தொழிலாளி மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன்(38). இவருக்கும் சின்னமனூர் அருகே உள்ள பெருமாள் பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் (31) திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரன் (30). அவரது மனைவி நிரஞ்சனா (23).
மணிகண்டன் தன் மைத்துனர் பாண்டீஸ்வரனின் மனைவி நிரஞ்சனாவுடன் வெளியிடங்களில் சந்தித்துப் பேசி வந்துள்ளார். இதனை உறவினர்கள் பலமுறை கண்டித்து வந்துள்ளனர். இது குறித்து பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவிற்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது குடும்பத்துடன் ஒத்தப்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டியில் உள்ள லூர்து நகரில் குடியேறினார். இந்நிலையில் மணிகண்டன் ஏற்கெனவே நிரஞ்சனாவிடம் போனில் பேசியதைப் பதிவு செய்து வைத்திருந்தார். அதனை தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். இது குறித்து நிரஞ்சனா கடும் கோபத்தில் இருந்து வந்தார்.
பேச்சைக் குறைத்துக் கொண்டாலும் மணிகண்டன் தொடர்ந்து நிரஞ்சனாவிடம் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசி வந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட பாண்டீஸ்வரனுக்கும் அவரது மனைவி நிரஞ்சனாவிற்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது.
இப்பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வர பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் நேற்று (சனிக்கிழமை) காலை மணிகண்டன் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் இல்லாததால் கூலி வேலை செய்யும் இடத்திற்குத் தேடிச் சென்றனர். சண்முகா நதி சாலையில் மணிகண்டனும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் இது குறித்துப் பேசினர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். அப்போது ஆத்திரம் அடைந்த பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை பயங்கரமாகத் தாக்கினர். தடுக்க வந்த ராஜேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பாண்டீஸ்வரன் மனைவியுடன் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிலைமணி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காயமடைந்த ராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.