

புதுச்சேரியில் வெங்காய மூட்டையைத் திருடி இருசக்கர வாகனத்தில் கடத்திய நபரைப் பிடித்து கட்டிவைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு பெங்களூரு, சென்னை, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து லாரிகள் மூலம் வெங்காயம் வருகிறது. புதுச்சேரிக்கு நாள் ஒன்றுக்கு 100 டன் வெங்காயம் தேவைப்படுகிறது. தற்போது தமிழகத்தைப் போல், புதுச்சேரியிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் புதுச்சேரிக்கு தற்போது 20 டன் வெங்காயம் மட்டுமே கிடைக்கிறது.
புதுச்சேரியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வின் காரணமாக வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் வெங்காயம் திருடி இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற மர்ம நபரைப் பிடித்து, கட்டிவைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகரின் பெரிய அங்காடியான குபேர் அங்காடி ஒட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியில் மொத்த காய்கறிக் கடைகள் உள்ளன. இங்கு வழக்கமாக நள்ளிரவில் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் கடைகளின் வெளியே மூட்டை மூட்டையாக இறக்கி வைக்கப்படும்.
அதிகாலையில் சிறுவியாபாரிகள் இங்கிருந்து காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். அதுபோல் இன்று (டிச.7) அதிகாலை பெங்களூருவில் இருந்து லாரி மூலம் வேல்முருகன் என்பவரின் கடைக்கு வந்த வெங்காய மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடையின் முன்பு இறக்கி வைத்து விட்டுச் சென்றனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் 50 கிலோ எடை கொண்ட வெங்காய மூட்டையை திருடிச் செல்ல முயன்றார். இதனைக் கண்ட அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவரைப் பிடித்தபோது அவர் வெங்காய மூட்டையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கட்டிவைத்து உதைத்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது அவர் புதுச்சேரி ஐயங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், முதலில் ஒரு வெங்காய மூட்டையைத் திருடிச் சென்று வீட்டில் வைத்துவிட்டு, பின்னர் வந்து இரண்டாவது மூட்டையைத் திருடும் போது மாட்டிக்கொண்டதும், மேலும் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறி மூட்டைகளை அவர் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரது வீட்டில் திருடி வைத்திருந்த ஒரு மூட்டை வெங்காயத்தை தொழிலாளர்கள் மீட்டு, கடைக்கு எடுத்து வந்தனர். பின்னர் வெங்காயம் திருடிய மர்ம நபரின் மனைவி கேட்டுக்கொண்டதையடுத்து வெங்காயம் திருடிய நபரை விடுவித்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் வேல்முருகன் கூறும்போது, "மார்க்கெட்டில் அடிக்கடி பூண்டு உள்ளிட்ட காய்கறி மூட்டைகள் மாயமாகி வந்தன. தற்போது, வெங்காய விலை உயர்வு காரணமாக இந்தத் திருட்டு நடந்துள்ளது. திருட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம்" என்றார்.
புதுச்சேரியில் வெங்காய மூட்டையைத் திருடி இருசக்கர வாகனத்தில் கடத்திய நபரைக் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.