

மதுரை
மதுரை நகரில் பல்வேறு குற்றங்களையும் தடுக்கும் வகையில், குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளம் எஸ்ஐ சிவராம கிருஷ்ணன் ‘ வெல்வோம் ’ என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார்.
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனையின் பேரில் சுமார் 3 நிமிடம் ஓடும் குறும்படத்தை மதுரை ‘ நான் ஸ்டாப் கிரியேட்டர்ஸ் ’ குழுவினர் தயாரித்தனர்.
இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், தெப்பக்குளம் எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். வெளியீட்டு விழா அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் வரவேற்றார். காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர் வாதம் குறும்படத்தை வெளியிட்டார். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், காவல் துணை ஆணையர் கார்த்திக் பெற்றுக்கொண்டனர்.
காவல் ஆணையர் பேசியது:
பல்வேறு பிரச்சினைகளுக்கும் போதிய விழிப்புணர்வுயின்மையே காரணம். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒட்டியிருந்த சுவரொட்டி ஒன்றில் ஒற்றுமை, விழிப்புணர்வு, பாதுகாப்பு தேவை என்ற வாசங்கள் இடம் பெற்றிருந்தன. இது மகிழ்வாக இருந்தது. காவல்துறையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. கடந்த 18 மாதத்தில் மதுரை நகரை நான் ஆய்வு செய்ததில் 2006 போன்ற காலகட்டத்தை காட்டிலும் குற்றச் செயல்களில் நிறைய வித்தியாசம் உள்ளது.
இதைத்தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. நகர் முழுதும் தற்போது 10000 சிசிடிவிக்கள் பொருத்தி உள்ளோம். தொடர்ந்து 9 ஆயிரம் தெருக்களில் சிசிடிவி பொருத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் நகரில் செயின் பறிப்பு சுமார் 100-ஐ தாண்டும். கடந்த 9 மாதத்தில் 66 ஆக குறைந்து இருப்பதற்கு காரணம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
17-25 வயது இளைஞர்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுவது அவர்களின் தவறான நட்பே காரணம். இக் குறும்படத்தில் நடிக்க, அணுகியபோது, சமுத்திரக் கனி, சசிகுமார் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டனர். எல்லோருக்கும் இது சென்றடைவேண்டும், என்றார்.
சசிக்குமார் பேசும்போது, ‘‘ இக்குறும்படத்தில் நடித்தது எங்களுக்கு பெருமை. இது குறும்பட மாக தெரியலாம். இதன் உழைப்பை பாருங்கள். இதில் சொல்லப்படும் எஸ்ஓஎஸ் ( காப்பாற்ற வாங்க) ஆப்பை செல்போன்களில் பதிவிறக்கும் செய்யுங்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுகள். சினிமாவில் நடிக்கும் நாங்கள் ரீல் ஹீரோக்கள். காவல்துறையினரே ரியல் ஹீரோக்கள். குற்றத் தடுப்புக்கு நாமும் உதவும் நோக்கில் இதில் நடித்துள்ளோம். மதுரையை காக்க நாங்களும் தொடந்து ஒத்துழைப்போம்,’’ என்றார்.
சமுத்திரக்கனி பேசுகையில், ‘‘ இது சிறிய படைப்பு என்றாலும், உழைப்பு அதிகம். 7.50 கோடி மக்களுக்கு 1.25 லட்சம் போலீஸார் போதாது. நம்மை நாமே பாதுகாக்கவேண்டும். சிறுவயதில் நல்ல விஷயம் கற்கவேண்டும். பலர் நடுவில் வாழ்ந்துவிட்டு செல்கின்றனர். வாழ்ந்ததற்கான மிச்சம் விட்டுச் செல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் இக்குறும் படத்தை எடுத்துச் செல்லவேண்டும். நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். கெட்டவன் என, தெரிந்தால் கட் செய்யுங்கள்,’’ என்றார்.
விழா வில் அமெரிக்கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் துணை காவல் ஆணையர்கள் பழனிக்குமார், பாஸ்கரன், சுகுமாறன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். உதவி ஆணையர் மணிவண்ணன் நன்றி கூறினார்.