மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி: பண மோசடி செய்தவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி

மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி: பண மோசடி செய்தவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி
Updated on
1 min read

மதுரை

மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) என்பதால் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. வழக்கத்தைவிட ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்திருந்தனர்.

மதியம் 1.40 மணி அளவில் ஆட்சியர் அலுவலக மெயின் நுழைவு வாயில் அருகே பெண் ஒருவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினர். அப்பெண்ணிடம் இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி ஆகியனவற்றை பறிமுதல் செய்தனர்.

தல்லாகுளம் போலீஸார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மனைவி லட்சுமி(40) எனத் தெரிந்தது. அவர் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் தோட்டத்தில் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், லட்சுமி அவரது மகளுக்கு அரசு வேலை வாங்குவது தொடர்பாக அவர் பணிபுரியும் தோட்ட உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பணம் கொடுத்து இருக்கிறார். பணம் வாங்கிய நபர் லட்சுமியை ஏமாற்றியதால், உத்தப்பநாயக்கனூர் போலீஸில் மீது புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் முறையாக விசாரிக்காத ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பொது இடத்தில் தீக்குளிக்க முயன்றதாக கூறி லட்சுமி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in