

மதுரை
மதுரையில் பாலியல் தொழிலுக்கு ஆன்லைன் மூலம் இளைஞர்களுக்கு தூண்டிலிட்டு ஏமாற்றி நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகரில் பல்வேறு இடங்களில் மசாஜ் கிளப் எனும் பெயரில் பாலியல் தொழில் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக நகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
அவரது உத்தரவின் பேரில், ஆட்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமா மாலா தலைமையிலான தனிப்படையினர் நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், வெளியூர் பெண்களை அழைத்துவந்து இளைஞர்களை ஏமாற்றி அவர்களிடம் நகை, பணம் பறிக்கும் விதமாக தொழில்புரிந்த 10-க்கும் மேற்பட்ட மசாஜ் மையங்கள், வீடுகளில் பாலியல் தொழில் புரிந்ததாக 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மசாஜ் மையம் நடத்திய உரிமையாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸாரின் கெடுபிடியால் மசாஜ் மையத்தைத் தவிர்த்து, பாலியல் தொழிலுக்காக ஆன்லைன் மூலம் இளைஞர்களை அழைத்து ஏமாற்றி நகை, பணம் பறிப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில், சிவகாசியைச் சேர்ந்த சக்தி கணேஷ் கொடுத்த புகாரில், ‘‘ நான் அண்ணாநகரிலுள்ள பேக்கரி ஒன்றில் நேற்று டீ குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது, என்னை தினேஷ் என்பவர் அணுகினார். அழகான பெண்கள் இருப்பதாக ஆசை வார்த்தைகள் கூறினார். பின்னர் என்னை கோமதிபுரம் தாழை வீதியிலுள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த கலைச்செல்வி என்பவரை அறிமுகப்படுத்தினார். அவரிடம் பேசிய சிறிது நேரத்தில் இருவரும், 3 பவுன் செயின், 7 கிராம் மோதிரத்தை பறித்துவிட்டு தப்பினார்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
போலீஸாரின் விசாரணையில், சக்தி கணேஷிடம் பெண் ஆசை காட்டி, நகை திருடியவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த தினேஷ்(30), கலைச்செல்வி(30) தம்பதி எனத் தெரிந்தது. அவர்களை போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில், இவர்கள் நேரிலும், ஆன்லைன் மூலமும் பாலியல் தொழிலுக்கு இளைஞர்களை அழைத்து ஏமாற்றி நகை, பணம் பறிப்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலி மசாஜ் மையங்கள், ஆன்லைனில் பாலியலுக்கு அழைப்பதைத் தடுக்க, தனிப்படையினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.