

மதுரை
மதுரையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவரது தந்தை இளவரசன். ரஞ்சித் குமார், அப்பகுதியில் நீண்ட காலமாகவே ரியல் எஸ்டேட் செய்துவருகிறார். சீனியம்மாள் காம்பவுண்டு பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. திருமணமாகி குடும்பத்துடன் அங்கு வசித்துவந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு எஸ்.எஸ்.காலனி, ராஜன் ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் வழக்கம்போல் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மேலும், செல்போனிலும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால், காலையில் குடும்பத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதற்கிடையில், ஆண் சடலம் ஒன்று ராஜன் ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் இருப்பதாக போலீஸுக்கு தகவல்வர அங்கு சென்று பார்த்தபோது அது ரஞ்சித் குமார் என்பது உறுதியானது.
உடலில் 5 இடங்களில் கத்திக்குத்து காயம் உள்ளதோடு அவருடை பிறப்புறுப்பும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதத்தை மீட்ட போலீஸார் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ரஞ்சித் குமார் தொழில் போட்டியில் கொல்லப்பட்டாரா இல்லை பெண் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.