

மதுரை
மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் கழிவறையில் தனது கைலியால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறைக்கு வந்த இரண்டாவது நாளே அவர் தற்கொலை செய்துகொண்டது அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகேயுள்ள கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பெரியன் (வயது 27). இவரது மனைவி அபிநயா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மனைவி அபிநயாவின் மீது வெள்ளைப்பெரியனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது நடத்தையைக் குறிப்பிட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மதியம் சமரசம் பேசுவதற்காக மனைவி அபிநயாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். வலசை எனும் பகுதியில் ஒரு தோட்டத்தில் 2 பேரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போதும் சந்தேக நட்பு குறித்தே வெள்ளைப்பெரியன் பேசியதாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த வெள்ளைப்பெரியன் அபிநயாவை தாக்கி தோட்டத்திலிருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைப்பெரியனை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வெள்ளைப்பெரியன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் வெள்ளைப்பெரியன் நேற்று நள்ளிரவு சிறையில் உள்ள கழிவறையில் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். வெள்ளைப்பெரியனை ஜெயில் காவலர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே வெள்ளைப்பெரியன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.