உறவினரின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற மாணவர் தடுப்பணையில் மூழ்கி மரணம்: மதுரை அருகே சோகம்

உறவினரின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற மாணவர் தடுப்பணையில் மூழ்கி மரணம்: மதுரை அருகே சோகம்
Updated on
1 min read

மதுரை

மதுரை அருகே உறவினரின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற மாணவர் தடுப்பணை நீரில் மூழ்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகன் தினேஷ் (19). தினேஷின் மாமா கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

அவரது அஸ்தியை வைகை ஆற்றில் கரைப்பதற்கு குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தினேஷ் குமார் மற்றும் உறவினர்கள் வைகை ஆற்றுக்குச் சென்றனர்.

சோழவந்தான் காடுவெட்டி அருகே உள்ள வைகை ஆற்றில் நிலையூர் கால்வாய் அருகில் உள்ள தடுப்பணைக்குச் சென்றனர். அங்கு தினேஷ் உள்பட 6 பேர் இறங்கி அஸ்தியைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆழமான பகுதிகுச் சென்ற தினேஷ் மற்றும் அவரது மற்றொரு உறவினர் ஒருவரும் நீரில் சிக்கிக் கொண்டு அலறினர்.

இருவரில் ஒருவரை உறவினர்கள் மீட்டனர். ஆனால், தினேஷை மட்டும் மீட்க முடியவில்லை. உறவினர்கள் தீவிரமாகத் தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

உடனே, இதுபற்றி சோழவந்தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் தினேஷை வெகுநேரமாகத் தேடியும் உடலை மீட்க முடியவில்லை.

உறவினர் அஸ்தியைக் கரைக்கச் சென்ற இடத்தில் இன்னொரு உயிர் பலியான சம்பவம் அக்குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ்குமார் அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in