

மதுரை,
மதுரையில் சமீபகாலமாக பழிக்குப் பழி மற்றும் சொற்ப காரணங்களுக்கான கொலைகள் அதிகரிப்பதால் மக்கள் அச்சம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மதுரை நகரில் ஏற்கெனவே காமராசர்புரத்தில் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர்களுக்குள் இடையேயான பதவி சண்டையில் இரு தரப்பிலும் பழிக்கப் பழி கொலைகள் தொடர்கின்றன.
இது வரை 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். யாகப்பா நகரில் கஞ்சா விற்பனை போட்டியில் ஏற்பட்ட மோதலில் இருவேறு தரப்பினருக்கு இடையே மாறி, மாறி 10-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவனியாபுரத்திலும் இருதரப்பிலும் பழிக்கு, பழி தொடர்ந்தது.
இந்நிலையில் சமீபத்தில் மதுரை நகரில் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்து, பின் கோஷ்டியாகப் பிரிந்து ஒருவரையொருவரை பழி தீர்த்துக்கொள்வது அதிகரிக்கிறது. கடந்த 7 மாதத்தில் மதுரை நகரில் 25 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் திமுக பிரமுகரின் மருமகன் வழக்கறிஞர் பாண்டி உட்பட 10 பேர் பழிக்கு, பழியாக கொலை செய்யப்பட்டனர்.
மேலும், கொலை வழக்கில் சிக்கி, காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட செல்லும்போது, காவல்நிலைய வாசல் அருகே வைத்தும் கொலை சம்பவம் நடக்கிறது. தல்லாகுளம், புதூர் பகுதியில் வைத்து பழிக்கு பழியாக இருவர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்றுமுன் தினம் இரவில் புதூர் பகுதியில் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ராஜாவும் பழிக்குப்பழி சம்பவ பட்டியலில் சேர்ந்துள்ளார்.
இது தவிர, சில சொற்ப காரணத்திற்கான கொலைகளும் அரங்கேறுகிறது. மதிச்சியம் பகுதியில் வீட்டில் கழிப்பிட வசதியின்றி, வைகை ஆற்றுப் பகுதிக்கு திறந்தவெளி கழிப்பிடம் கழிக்கச் சென்ற மாணவியை கேலி செய்த நபரை தட்டிக்கேட்ட தந்தை, காசு கொடுக் காமல் தினமும் டீ, காபி தர மறுத்த டீ மாஸ்டர் மாரிமுத்து ஆகியோரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும், கொலை செய்யப்படுவோர் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதுவரை மதுரை நகர், புறநகர் என, சுமார் 70க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவம் பொது இடங்களில் நடப்பதால் மக்கள் அச்சப்படும் சூழல் நேர்ந்துள்ளது.
வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘ மதுரை நகரில் ரவுடிகள், வழக்குகளில் சிக்கியோர் ஒருவருக்கொருவர் முன்பகையால் பழி தீர்த்துக் கொள்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், சிறிய காரணத்திற்காக நடக்கும் கொலைகளை ஏற்க முடியாது. இதனால் அப்பாவி குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். மதிச்சியம், கரும்பாலை, காமராசர்புரம் போன்ற சில பகுதிகளில் பொது இடங்களில் தவறு செய்வோர் பற்றி காவல் நிலையங்களில் தகவல் கொடுக்கவே மக்கள் தயங்குகின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலும் குடித்துவிட்டு ரகளை செய்வோர், பொது இடங்களில் தகராறு செய்யபவர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளை பட்டியலிட்டு போலீஸார் கண்காணிக்கவேண்டும்,’’ என்றார்.