

தருமபுரி
தருமபுரி மாவட்டம் பிக்கம்பட்டி கிராமத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவரின் பெற்றோரை, பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து தாக்குவதாக புகார் எழுந்துள்ளது.
பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராணி என்பவர் குடும்பத்தினருடன் வந்து நேற்று (வெள்ளிக்கிழமை) தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "பிக்கம்பட்டி கிராமத்தில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 10 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். என் கணவரின் தம்பி காளிதாசனின் மகன் அஜித்குமார்(23). எங்கள் பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை அஜித்குமார் காதலித்துள்ளார். சுமார் 40 நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை தேட பெங்களூருவுக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது, பென்னாகரம் தாளப்பள்ளத்தைச் சேர்ந்த பாஸ்கர், செந்தில், தர்மலிங்கம், பென்னாகரம் முனியப்பன், பிரியாவின் தாய், தந்தையர் உள்ளிட்டோர் பெங்களூருவுக்கு வந்து எங்களை ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் எங்களை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
மறுநாளான 25.7.2019 அன்று தாசம்பட்டி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். பின்னர், ஒகேனக்கல்லில் வனத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்றில் அடைத்து வைத்து தாக்கி கொடுமை செய்தனர். வெற்றுப் பத்திரத்திலும் கையெழுத்தும் பெற்றனர். கடும் தாக்குதலில் காளிதாஸின் மனைவி உடல்நிலை மிகவும் பாதிப்படைந்தது.
இந்நிலையில், எங்களை ஓசூர் வரை காரில் அழைத்துச் சென்று இறக்கி விட்டுச் சென்றனர். அஜித்குமாரின் பாட்டி, தாத்தாவையும் ஏரிகோடி கிராமத்துக்கு தேடிச் சென்று தாக்கினர். எனவே, காதல் திருமண விவகாரத்துக்காக எங்களை ஆணவப் படுகொலை செய்யும் நோக்கத்தில் கொடும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ராஜாசெல்லம்