

தமிழகம் முழுவதும் வடமாநிலக் கொள்ளையர்களைத் தடுக்க, அவர்களின் கொள்ளை பாணியை பொதுமக்களுக்குத் தெரிவித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்முன், அவர்கள் மேற்கொள்ளும் செயல் குறித்து வரைபடத்துடன் மதுரை மாநகர போலீஸார் பொதுமக்களுக்கு முன்எச்சரிகை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
விதவிதமான குறியீடு..
இதன்படி, ஆங்கிலத்தில் ‘D’ என சுவரில் எழுதியிருந்தால் வீடு, கடைக்குள் நுழைவது கடினம்.
‘எம்’ போன்ற வடிவிலான குறியீடு எனில் சிசிடிவி கேமரா அல்லது அலாரம் இருக்கிறது என அர்த்தம்.
புள்ளிகள் இருந்தால் செழிப்பான வீடு.
முக்கோணம் வடிவில் வரைந்து இருந்தால் பெண்கள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கின்றனர்.
பந்து போன்று வடிவில் நடுவில் கோடு இருந்தால் எதுவும் தேறாது.
செவ்வக பாக்சில் நடுவில் நான்கு மூலைக்கும் கோடு இருந்தால் ஆள்ளில்லாத வீடு என்ற அர்த்தங்களை குறிப்பிடும் அடையாளங்களைக் கொண்டு அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீஸாருக்கு தெரியவந்ததுள்ளது.
கருப்பாயூரணியில் கைவரிசை..
அண்மையில், கருப்பாயூரணி பகுதியில் வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வது போன்று சாக்பீஸால் பல்வேறு வடிவில் குறியீடு போட்டுள்ளனர். இதில் பூட்டிய வீடுகளில் ‘எக்ஸ்’ என்ற குறியீடு போட்டு கொள்ளையடித்து இருப்பதும் தெரிகிறது. இது போன்ற குறியீடுகள் தங்களது வீடு, கடை சுவர்களில் வரையப்பட்டு இருந்தால் உடனே அழித்திடவேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது பற்றி போலீஸார் கூறியது:
உள்ளூர் கொள்ளையர்களைவிட வடமாநில இளைஞர்கள் வித்தியாசமான கோணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். பல இடங்களில் அவர்கள் நடத்தும் கொள்ளைகளை எளிதில் கண்டறிய முடியாது. சம்பவத்திற்கு முன்பாக சில குறியீடுகளை போட்டு, கொள்ளையில் ஈடுபடுவது வடமாநில இளைஞர்கள் பாணி என்பது சமீபத்தில் தெரிந்தது.
எனவே, அவர்கள் கையாளும் சில அடையாளங்களைக் காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். காவல் துறை சார்பில், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது. நகரில் வார்டு எஸ்ஐக்கள் மூலம் அந்தந்த வார்டுகளில் பொது மக்கள் மற்றும் குறிப்பாக பெண்களை அழைத்து அறிவுரை கூற ஏற்பாடு செய்யப்படும்.
தங்களது வீடு, கடை சுவர்களில் அனுமதியின்றி ஏதாவது கலர் பெயின்டில் குறியீடு, அடையாளம் வரைந்து இருந்தால், அவற்றை உடனே அழித்துவிடுங்கள். அருகிலுள்ள காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கலாம். எனெனில் இக்குறியீடுகளை வரைந்த கொள்ளையர்கள் அருகில் எங்காவது பதுங்கி இருக்கலாம். அந்தப் பகுதியில் ஆய்வு செய்வதன் மூலம் அவர்களைப் பிடித்துவிடலாம்" என்றனர்.