

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலையில் விசாரணை வளையத்தில் சிக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், போலீஸுக்கு பயந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகு சங்கர், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் கடந்த 23-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பல்வேறு கோணத்தில் விசாரிக்கும் போலீஸார், சந்தேகத்தின் பேரில் திமுக முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாளிடமும் விசாரித்தனர். அவரது மகன் கார்த்திகேயனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீஸ் பிடியில் கார்த்திகேயன் உள்ள நிலையில், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவினர் தூண்டுதலின்பேரிலேயே தனது மகனை போலீஸ் பிடித்து சென்றது என சீனியம்மாள் மதுரையில் நேற்று குற்றஞ்சாட்டினார். மகன் போலீஸில் சிக்கிய சூழலில் சீனியம்மாளையும் போலீஸார் நெருங்குகின்றனர்.
இந்நிலையில், மதுரை கூடல்நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த சீனியம்மாளை இன்று காலை முதல் காணவில்லை. அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரித்ததால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்ய சென்றிருப்பதாகக் கூறினர். ஆனால், எந்த மருத்துவமனை எனத் தெளிவுபடத் தெரிவிக்கவில்லை. போலீஸுக்கு பயந்து அவர் தலைமறைவாகி இருக்கலாம் என மற்றொரு தகவலும் பரவுகிறது.
சீனியம்மாள் கணவர் சன்னாசியிடம் கேட்ட போது, "முன்னாள் மேயர் கொலையில் வேண்டுமென்றே எங்களை சிக்கவைக்க முயற்சி நடக்கிறது. சிபிசிஐடி விசாரித்தால் உண்மை நிலவரத்தை கூறுவோம். சிபிசிஐடி மீது நம்பிக்கை உள்ளது.
கொலைக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதால் திமுகக்காரர்களே, திமுக முன்னாள் மேயரை கொலை செய்து இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, அதிமுக மேலிட உத்தரவால் போலீஸார் எங்களை பிடிக்கின்றனர்.
எனது மகன் நிலவரம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. வேதனையில் மனைவியின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்" என்றார்.