Published : 26 Jul 2019 05:42 PM
Last Updated : 26 Jul 2019 05:42 PM

வரதட்சணை கேட்டு கொடுமை: திருவாரூரில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

பிரதிநிதித்துவம்

திருவாரூர்

திருவாரூரில், வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த நகைக்கடை உரிமையாளரின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டினத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், இவரது மகன் அருண்(38), இவர் திருவாரூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், திருவாரூர் அருகே உள்ள பருத்தியூரை சேர்ந்த மைதிலி (29) என்பவருக்கும், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

60 சவரன் தங்க நகையுடன், சீர்வரிசை பொருட்களும் கொடுத்து, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக  நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 

இந்த நிலையில், அருண் மற்றும் அவரது தந்தை  இளங்கோ, தாய்  கலா ஆகியோர் மருமகள் மைதிலியிடம் அவரது பெற்றோரிடம் சென்று கூடுதலாக நகைகளை வாங்கி வரும்படி  தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னரும் இதே போன்று பிரச்சனை நடந்துள்ளது.

இதனால் மன உளைச்சலிலிருந்த மைதிலி, நேற்று (வியாழக்கிழமை) இரவு 2 மணி அளவில் தன் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளித்தார். தீக்குளித்த மைதிலியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், கணவர் அருண் மற்றும் வீட்டில் இருந்தவர்களும் மைதிலியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சையிலிருந்த மைதிலியிடம்  இன்று காலை திருவாரூர் குற்றவியல் நீதிபதி விசாரணை நடத்தி மரண வாக்குமூலம் பெற்றார். அப்போது தன்னை வரதட்சணை கேட்டு கணவர் அருண் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கொடுமை செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து வைப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x