

ராமேசுவரம்: கொழும்பு துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 420 கிலோ ஐஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கொழும்பு துறைமுகத்தில் சந்தேகத்துக்குரிய கண்டெய்னர் ஒன்றை சோதனையிட்டதில், 420 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட டவலுக்குள் ஐஸ் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
முதற்கட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் கண்டெய்னரில் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக இலங்கையின் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ்போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.500 கோடியாகும்.