

டிடிவி தினகரன்
தென்காசி: தமிழ்நாட்டுக்கு தேவையான எந்த திட்டமும் தவெக அரசிடம் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்
தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விவசாய சங்கத்தினரிடம் ஆலோசனை செய்த பின்னர் மேட்டூர் அணையை திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, 30 நாட்கள் தண்ணீர் வந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். இப்போது தண்ணீர் திறந்து விடுவதால் எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயனளிக்காது.
ரீல்ஸ்களுக்கு வேண்டுமானால் பயன்படும். விஜய் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து வெளியே வந்து, வீட்டுக்கு திரும்பிச் செல்வது வரை திரைப்பட சூட்டிங் போலத்தான் நடந்துகொண்டு இருக்கிறார். சினிமா கவர்ச்சியால் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. தமிழ் மொழியைக்கூட அமைச்சர்களால் சரியாக பேச முடியவில்லை. முதல்வரும் கையில் எழுதி வைத்து பார்த்துபடிப்பதை தவறாக படிக்கிறார்.
தமிழும் வரவில்லை, கணக்கும் தெரியாமல் தடுமாறுகிறார். பொங்கலுக்கு வழங்கும் 8 முழம் வேட்டியை 4 முழமாக மாற்றிவிட்டனர். இவருக்கு வாக்களித்தவர்கள் அனைத்தையும் உணரத் தொடங்கிவிட்டனர். விஜய் பிரதமர் வேட்பாளராம். ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு, திமுகவை விட்டு விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ். இப்போது ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதை கேலிக்கூத்தாக்கும் அளவுக்கு, விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் தீங்கு நடக்கிறதோ, அதற்கெல்லாம் காங்கிரஸ் காரணமாக இருந்துள்ளது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கோபத்தில் தவெக-வுக்கு ஆதரவு அளித்து, காங்கிரஸார் தங்கள் தலையிலேயே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். இவ்வாறு கூறினார்.