

சென்னை: போதைப் பொருள் கடத்தி வந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவிலிருந்து, தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆர்.கே.நகர் போலீஸார் நேற்று முன்தினம் காலை, கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர் பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பெண் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
வலி நிவாரண மாத்திரைகள்: அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், கையில் வைத்திருந்த பைகளை வாங்கிசோதித்தபோது, போதைப் பொருளாக பயன்படுத்த வைத்திருந்த வலி நிவாரணமாத்திரைகள் மற்றும் கஞ்சா இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் கடத்தி வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த அருள்ராஜ் (25), அரவிந்தன் (26), தண்டையார் பேட்டையைச்சேர்ந்த சூர்யா (25), கோபால்(32), திருவொற்றியூரைச் சேர்ந்த சுவேதா (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 600 வலி நிவாரண மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திராவிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.