

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு கோழி தீவனம் பாரம் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று இன்று(16-ம் தேதி) காலை 10 மணியளவில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் நடுக்காரப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் முனுசாமி (43) ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
உயர்மட்ட மேம்பாலப்பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் வழக்கமாக போக்குவரத்து தேக்கமடைந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இரட்டைப் பாலத்தை கடந்து சென்ற அந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது உரசி பின்னர், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது.
அதன்பின்னர், வேலூரில் இருந்து திருச்சிக்கு பார்சல் ஏற்றிச் சென்ற லாரி மீது டாரஸ் லாரி மோதியதால் பார்சல் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்மார்க்க சாலைக்குள் நுழைந்து எதிரில் வந்த 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற தருமபுரி அடுத்த மாதேமங்கலம் குட்டூரைச் சேர்ந்த அருணகிரி, அவரது சகோதரி கலையரசி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல, டாரஸ் லாரியில் ஓட்டுநர் முனுசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் சென்ற சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தினேஷ்(30) என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தவிர, இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ், சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தொப்பூர் போலீஸார் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளர்கள் இணைந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.