

சென்னை: சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22), கடந்த 16-ம் தேதி அதிகாலை பைக்கில் சென்ற போது, 4 பேர் கும்பல் ஒரு சிறுவனைத் தாக்கி செல்போனை பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதை தட்டிக்கேட்ட ஆகாஷை, அந்தக் கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதில் காயம் அடைந்த ஆகாஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல், சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (45), கடந்த 16-ம் தேதி அதிகாலை ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் நடந்து சென்ற போது பைக்கில் வந்த 4 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி, சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றனர்.
ஓட்டேரி போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த 2 வழிப்பறி சம்பவங்களிலும் தொடர்புடைய வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ் (23), ஓட்டேரி வாழைமா நகரைச் சேர்ந்த சதீஷ் (18) ஆகியோரை கடந்த 16-ம் தேதி கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஓட்டேரியைச் சேர்ந்த விக்னேஷ் (20), சதீஷ்குமார் (20) ஆகியோரை மறுநாள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.