

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள அரியப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (26). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த கோகுல், தன் தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற கோகுல் இரவு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை பெரியபாளையம் அருகே தண்டுமா நகர் பகுதியில் காலி இடத்தில் கோகுல், கும்பல் ஒன்றால் தலை, முகம், கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பெரியபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், நேற்று பகலில் தண்டுமா நகர் பகுதியை சேர்ந்த தீனா (22), சிவக்குமார் (21), பேரரசு (20), தியாகராஜன் (19) ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸார் தீவிர விசாரணை பெரியபாளையம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கோகுல் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.