

கரூர்: இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜா(28), பிரபாகரன்(28). இவர்கள் இருவரும் 2021 ஜூலை 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பிச்சம்பட்டியில் சாலையில் தனியார் கட்டுமான லாரி இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த லாரி ஓட்டுநர் செந்திலிடம் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். செந்திலுக்கு ஆதரவாக தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான, மணவாசியை சேர்ந்த தர்மதுரை (29) பேசினார். தகராறை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பிரபு(35) இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, அனுப்பிவைத்தார்.
பின்னர், பிச்சம்பட்டி பகவதிஅம்மன் கோயில் முன்பு ஜூலை 5-ம் தேதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, தர்மதுரை உள்ளிட்ட 10-க்கும் அதிகமானோர் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபுவை வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த பிரபு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தர்மதுரை, இவரது சகோதரர் ராஜதுரை(31) மற்றும் அபிஷேக்(27) ஆகியோர் உட்பட 14 பேரை கைது செய்தனர். கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றது.
இதில், குற்றம் சுமத்தப்பட்ட ராஜதுரை, தர்மதுரை, அபிஷேக் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மற்ற 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.