

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த ஆண்டவர்மலையை சேர்ந்தவர் கோபிநாத் (45). விவசாயி. அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
கோபிநாத்துக்கும், அவரது மைத்துனர் தினேஷ்குமாருக்கும் (28) பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில், கோபிநாத் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, மனைவி பிருந்தாவிடம் பிரச்சினை செய்தாராம்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு கோபிநாத் மது அருந்திவிட்டு வந்து, மனைவி பிருந்தாவை அடித்துள்ளார். இதையறிந்த மாமனார் வேலுசாமி, மைத்துனர் தினேஷ் குமார் ஆகியோர் கோபிநாத் வீட்டுக்கு வந்து, பிருந்தாவை தாக்கியது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். அப்போது பிருந்தா, தனது தந்தை வேலுசாமி, தம்பி தினேஷ்குமார் ஆகியோரை அருகில் உள்ள வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார். துப்பாக்கியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்த கோபிநாத், வானத்தை நோக்கி 3 முறை சுட்டு மிரட்டியதுடன், மாமானர் குடும்பத்தினர் வந்த காரை தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்து, அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், கோபிநாத் மீது கொலை மிரட்டல் விடுத்தது, உரிமம் பெற்ற துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.