

சென்னை: லஞ்சம் பெற்று பிரபல ரவுடிக்கு சலுகை வழங்கிய குற்றச்சாட்டில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி (40). இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸார், அவருக்கு விதியை மீறி சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நடைபெற்ற விசாரணையில் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கும், நீதிமன்றத்திலிருந்து புழல் சிறைக்கும் அழைத்துச் செல்லும்போது வழிக்காவலுக்குச் சென்ற ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து, எஸ்ஐ-க்கள் திருமுருகன், செல்லதுரை ஆகியோர் லஞ்சமாக பணம் பெற்று வெள்ளைக்காளிக்கு சலுகை காட்டியது தெரியவந்து.
இதையடுத்து, 3 பேரையும் சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் பணியிடை நீக்கம் செய்தார்.
ரவுடியின் பின்னணி
மதுரையைச் சேர்ந்த வெள்ளைக் காளி மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காளியை, குற்ற வழக்கு தொடர்பாக போலீஸார் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, கடந்த ஜனவரியில் மீண்டும் சென்னை புழல் சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்து வந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சுங்கச்சாவடி அருகே வேனை நிறுத்தி, ஓட்டலில் சாப்பிடுவதற்காக வெள்ளைக் காளியை அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றது.
இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 3 போலீஸார் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக ரவுடி கொட்டுராஜாவை பெரம்பலூர் போலீஸார் என்கவுண்ட்டரில் தீர்த்துக் கட்டினர்.