

ரமேஷ்பாபு, ஷேக் அஸ்மா, நசுருதீன்
சென்னை: ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து, தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஜெயின் (67) என்ற முதியவர் கடந்த 22-ம் தேதி மாதவரத்திலிருந்து மூலக்கடை மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென அறுந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்து மற்றும் உதட்டில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் பட்டம் விற்பனை செய்த கொடுங்கையூரைச் சேர்ந்த ஷேக் அஸ்மா (38), அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு (53), மூலக்கடையைச் சேர்ந்த நசுருதீன் (34) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 35 பட்டங்கள், 5 மாஞ்சா நூல்கண்டுகளை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திராவிலிருந்து பட்டம் மற்றும் மாஞ்சா நூல்கண்டுகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.