

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வசந்தா (60) என்ற பெண், தனது 14 வயது பேரனுடன் தங்கி, அப்பகுதியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 20-ம் தேதி இரவு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வெங்காய கடையில் வேலை செய்து வரும் வெயிலுமுத்து, தேவேந்திரன், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் வசந்தாவின் பேரனிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
அப்போது, திடீரென சிறுவனைத் தாக்கி அவன் வைத்திருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
புகாரின்பேரில், கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்தை சேர்ந்த வெயிலுமுத்து (23), கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த தேவேந்திரன் (28), விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.