

சென்னையில் போதை பொருள் வழக்கில், இதுவரை நைஜீரியா, கேமரூன், சூடான் நாடுகளை சேர்ந்த 28 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த செப்.18-ம் தேதி போரூர் டோல்கேட் சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு போதைப் பொருள் வைத்திருந்த சரண்ராஜ், ரெக்ஜின்மோன், ஜமூனா குமார் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து மெத்தம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பவன்குமார், ஹாசிக் பாஷா, ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரை செப்.21-ம் தேதி போலீஸார் கைது செய்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கோவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த மாதம் 4-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்த சூடான் நாட்டை சேர்ந்த மொஹந்த் மோவியா அப்துல் ரஹ்மான் அல்டீராப்ஸ் (24), நைஜீரியாவை சேர்ந்த நாஜி லோடச்சுக்வு (27) ஆகிய இருவரையும் பெங்களூரில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, ரூ.1.41 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
சென்னையில் இதுவரை போதை பொருள் வழக்கில், நைஜீரியா நாட்டை சேர்ந்த 26 பேரும், கேமரூன் நாட்டை சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டை சேர்ந்த ஒருவரும் என 28 வெளிநாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.