

முருகன், ஜெகதீஷ்
சென்னை: ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரி வீட்டில் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரவள்ளூரில் உள்ள பெரியார் நகர் 1-வது தெருவில் வசிப்பவர் அசோக்குமார் (72). தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 17-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் வேளச்சேரியிலுள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்றார்.மறுநாள் காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள், 2 கைக்கடிகாரங்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் பட்டுப் புடவைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆராயப்பட்டது.
இதில் அசோக்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தைச் சேர்ந்த முருகன் என்ற தீனா (28), ஜெகதீஷ் (28) என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முருகன் பெரியபாளையம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கெனவே 15 திருட்டு வழக்குகளும், ஜெகதீஷ் மீது 3 திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.