

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, நடேசன் சாலையை சேர்ந்தவர் சையது அஸ்லம் (26). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 25-ம் தேதி மாலை ஜாம்பஜார், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பார்த்தசாரதி கோயில் ஆர்ச் எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், சையது அஸ்லமை வழிமறித்து தாக்கினர்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து ஜாம்பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், சையது அஸ்லமிடம் வழிப்பறியில் ஈடுபட்டது ராயப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (21), லாயிட்ஸ் ரோட்டை சேர்ந்த பெருமாள் (28) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சரவணன் மீது ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளும், பெருமாள் மீது 9 குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்தது.