

சென்னை உயர் நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து. | படங்கள்: எல்.சீனிவாசன் |
சென்னை: உயர் நீதிமன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மோதி 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து நேற்று காலை பயணிகளுடன் மாநகர பஸ் ஒன்று சென்னை தீவுத்திடல் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை ராமமூர்த்தி என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
பஸ் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் பலத்த சேதமடைந்தன. சில கார்களின் முன்பகுதிகள் நொறுங்கின. கார்கள் மீது மோதிய வேகத்தில் பஸ் தொடர்ந்து சென்று, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரின் மீது ஏறி நின்றது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்ஸில் இருந்த பயணிகள் இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
விபத்தில் சேதமடைந்த கார்கள்.
விபத்து காரணமாக என்.எஸ்.சி.போஸ் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூக்கடை போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போர் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகளை அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் சேதமடைந்த கார்கள் மற்றும் சாலையின் நடுவே நின்ற பஸ்ஸை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, நீண்ட நேரத்துக்கு பிறகு அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் ராமமூர்த்தி, நடத்துநர் தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பஸ்ஸின் பிரேக் உண்மையிலேயே பழுதடைந்ததா? விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? பஸ்ஸின் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேதம் அடைந்த கார்களில் பெரும்பாலானவை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் கார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், வேண்டுமென்றே பேருந்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.