

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயிலில் நேற்று இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் இரவு நேர காவலாளிகள் இருவர், பகல் நேர காவலாளி ஒருவர் என 3 பேர் பணியில் உள்ளனர். நேற்று இரவு காவலாளிகள் பேச்சி முத்து(50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் பணியில் இருந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணி அளவில் பகல் நேர காவலாளி கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் கொடி மரம் அருகே இரு காவலாளிகளும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து காவலாளி போலீஸாருக்கு தகவல் அளித்தார். சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட இரு காவலாளிகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும், கேமரா பதிவு உள்ள டி.வி.ஆரையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்றனர். கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது.
கோயிலில் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சரக டி.ஐ.ஜி அபினவ் குமார், எஸ்.பி கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.