

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம், அப்பண்ணபாளையம் வர்ஷிணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய சர்மா. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இவர்களுடன் சுப்பிரமணிய சர்மாவின் தாயார் கனக மகாலட்சுமி (66) வசித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சமையல் அறையில் மின் கசிவு ஏற்பட்டதில் தீயில் மாமியார் கனக மகாலட்சுமி சிக்கிக் கொண்டதாக லலிதா அலறினார். தகவல் அறிந்து பொதுமக்கள் தீயை அணைத்து கனக மகாலட்சுமியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாரிடம் லலிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
மாமியாருடன் வசிப்பதை நான் விரும்பவில்லை. யூ-டியூப்பில் ‘முதியோரை கொலை செய்வது எப்படி, என்று ஆய்வு செய்தேன். அதன்படி, மாமியாரிடம் அன்பாக பழக தொடங்கினேன்.
சம்பவத்தன்று திருடன் - போலீஸ் ஆட்டம் விளையாடலாம் என்று மாமியாரை அழைத்தேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அவரது கண்களை ஒரு துணியால் கட்டினேன். கைகளையும் கட்டினேன். இதற்கு முன்பாக பெட்ரோலை தயாராக வைத்து இருந்தேன்.
சமையல் அறைக்கு அவர் வந்ததும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினேன். அவர் அலறியபோது கீழே தள்ளிவிட்டேன். அவரது அலறல் வெளியே கேட்காமல் இருக்க டிவியை அதிக சத்தமாக வைத்து சீரியல் பார்த்தேன். பின்னர் ஸ்விட்ச் போர்டு மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினேன். இதற்குள் மாமியார் தீயில் கருகி இறந்துவிட்டார். ஆனால், வீட்டில் இருந்து புகை வந்ததால் அனைவரும் வந்து விட்டனர். அவர்களை நம்ப வைக்க மின்கசிவு என நாடகம் ஆடினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மருமகள் லலிதாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.