

கோவை: கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, மூவரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.
தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து, வெளியே சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவியும், இளைஞரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காரின் கதவை திறக்க சொல்லி மிரட்டியுள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் இருந்ததைப்பார்த்ததும் இருவரும் கார் கதவை திறக்கவில்லை. ஆத்திரமடைந்த மூவரும், அரிவாளால் காரின் முன்புற கண்ணாடியை வெட்டி உடைத்தனர். தொடர்ந்து, முன்புற கதவின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து அந்த மாணவியை வெளியே இழுத்தனர். அதை தடுத்த மாணவியின் நண்பரை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கினார்.
உடனே 3 பேரும் மாணவியை வெளியே இழுத்து, அருகேயுள்ள புதர் மறைவுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர். நேற்று அதிகாலை 2 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியின் நண்பர், கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
மாநகர வடக்கு துணை ஆணையர் தேவநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தலையில் காயத்துடன் இருந்த மாணவியின் காதலனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்களுடன் புதரில் மயங்கிக்கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைரேகை நிபுணர்கள் வருகை: சம்பவ இடத்துக்கு கைவிரல் ரேகை நிபுணர்கள் சென்று காரில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் ‘டபி’ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அப்பகுதியில் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. மர்ம நபர்கள் வந்த இருசக்கர வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த வாகனம் கோவில்பாளையம் பகுதியில் திருடப்பட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, துணை ஆணையர் தேவநாதன் மேற்பார்வையில் உதவி ஆணை யர்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையம் அருகே உள்ள பகுதி, அதன் பின்புறத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, பிருந்தாவன் நகர் மற்றும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பாஜக நாளை ஆர்ப்பாட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா பொருட்களின் 2-வது தலைநகரமாக கோவை மாவட்டம் விளங்கிவருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 5-ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.பெற்றோர் தங்கள் குழந்தை களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பு பணி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில், பாஜக மகளிரணி யினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.